கணிணி அனைவருக்கும் அறிமுகமான காலமது. மிக வேகமாக அனைத்து துறைகளிலும் கணிணியின் பயன்பாடு அதிகரித்து வந்தது. எந்த துறையில் எவ்வளவு படித்தவராயினும் கணிணியின் பயன்பாடு தெரியாமல் இருப்பது கல்வியறிவற்ற நிலைக்கு சமமாகும் என அவன் விரும்பிப்படிக்கும் நாவலாசிரியர் ஒரு “ஸ்பாட்டிபய்” நிகழ்வில் பேசிக்கொண்டிருந்ததை மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார் நிலனின் தந்தை.
நிலன், பிரபாகரனுக்கு ஒரே மகன். கனடாவிற்கு வேலை நிமித்தமாக கன்னியாகுமாரியிலிருந்து குடிபெயர்ந்து சென்ற பிரபாகரன் பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கும் நிலனின் கல்லூரிப்படிப்பிற்காக வழிகாட்டுதல் எங்கு கிடைக்குமென தேடிக்கொண்டிருக்கும் காலமிது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் கொரொனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவமனையில் வேலை நிமித்தமாகத் தங்கி பணிபுரிந்து வந்த நிலனில் தாய் திரும்பி வீடு வரவே இல்லை.
நிலன், நன்றாக படித்துக்கொண்டுருந்த பிள்ளை. தாயை இழந்த பின் அவனுக்கு வாழ்க்கை சற்றே சிரமமாக இருந்ததை உணர்ந்த பிரபாகரன் அவனை அதிகம் படிக்கச்சொல்வதில்லை. நிலனின் நிம்மதியே முக்கியத்துவம் வாய்ந்தது என அவன் போக்கில் விட்டு விட்டார்.
இந்த இரண்டு ஆண்டுகளில் நிலன் அதிகமாகக் கல்லூரிக்கல்வி பற்றி பேசவில்லை. ஆனால் அடுத்த தேர்வு முடிந்ததும் வழிகாட்டத் தான் தயார் நிலையில் இருக்க வேண்டுமென பிரபாகரன் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்.
தேர்வு முடிவுகள் வெளியான பின் ஓர் நாள் நிலனிடம் “ என்ன படிக்கலாம்னு நினைக்கிற?” என்றதற்கு நான் பங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் “புட்வேர் டிசைனிங் ” படிக்கப்போறேன் என்ற போது சற்றே திகைத்துத்தான் போனார் பிரபாகரன்.
கன்னியாகுமாரியில் உள்ள தாயை தொலைபேசியில் அழைத்துப் புலம்பியபோது அவள் சொன்னாள், “ நானும் பிள்ளையப்பார்த்து நாளாச்சு.. நான் அடிக்கடி போய் பாத்துக்கறேன் இல்லைனா அங்கேயே வீடு புடிச்சி அவனோட தங்கிக்கறேன்.. தோப்பை உங்க சித்தப்பா பாத்துக்கட்டும்.. பிள்ளைக்கும் அங்கே தனியா இல்லாம எங்களை எல்லாம் பார்த்தாப்புல இருக்கும்.. கொஞ்ச நாள் படிக்கட்டும்.. பிடிச்சதை படிக்கிறது தான் முக்கியம்.. இப்ப எல்லாம் கம்பியூட்டர் முன்னாடி உக்காறுரது தான் பெரிய வேலை.. நம்ம சொந்தக்காரங்க பிள்ளைங்க நெறைய சென்னையில இருக்கு.. ரெண்டு ஒரு மணி நேரத்துல பங்களூரு போய் இவனை பாத்துக்குடுங்க..அவனுக்கு எந்த காலேஜ் வேணுமோ அதுலயே சேத்துவிடு “ என.
நிலன் பெற்ற மதிப்பென்களுக்கு வெளி நாட்டவர்க்கென ஒதுக்கப்பட்ட சீட்டினைப்பெறுவது மிக இயல்பாகவே முடிந்தது. அடுத்த மாதமே இருவரும் கல்லூரி வளாகத்தில் அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, உரிய கட்டணங்களைக்கட்டி, விடுதியில் நிலனின் அறை எண்ணைக்குறித்துக்கொண்டு அதைத்தேடிச் சென்று கொண்டிருந்தனர்.
மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களினூடே அழகு செயற்கை நீர் வீழ்ச்சிகள், தொங்கு,மாடித்தேட்டங்கள், எந்த அடுக்கு மாடி கட்டிடதிருந்தும் காணும் வண்ணம் நடுவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் அதில் அளவான, அழகான புற்தரை,அதன் ஓரங்களில் கல் இருக்கைகள் அவற்றின் மேல் வெய்யில் படாத வண்ணம் அமைக்கப்பட மேல் மண்டபம் அதன் அலங்காரங்கள், அதன் மேலோடிய அழகிய கொடிகளென எங்கு திரும்பினாலும் கண்ணிறைந்த அழகான காட்சிகளும், ஓர் இலக்கை நோக்கி சென்றுக்ப்ண்டிருக்கும் ஏவுகனையினைப்போன்ற பாவனையில் மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மாணவர்களையும் ஆசிரியரையும் கடந்து மெல்ல நடந்து காபியும் இனிப்புப்பண்டங்களும் நிறைந்த காற்று வீசிய பகுதிக்கு வந்தவுடன் இருவரும் சொல்லி வைத்தற்ப்போல் நடையை சற்றே தளர்த்தினர்.
காலை முதல், இல்லை ஒரு மாத காலமாகவே இந்தப்பயணத்தை எவ்வாறு மேற்கொள்வதென முடிவு செய்து, அதற்கான பயணச்சீட்டு முதல் இங்கு கல்லூரியில் நிலனுக்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருட்கள் மற்றும் அந்தப் படிப்பிற்கேற்ற மடிக்கணிணி போன்றவற்றைப் பட்டியலிட்டு வாங்கி, அடுக்கிப் பத்திரமாக இங்கு கொண்டுவருதல், இங்கு வந்து ஓர் தங்கு விடுதியில் தங்கி இந்த கல்லூரியைப்பற்றி இரண்டு நாட்கள் கேட்டறிதல் எல்லாம் முடித்து இன்று அதிகாரப்பூர்வமாக கல்லூரி முதல்வரைச் ந்தித்து, சான்றிதழ் சரிபார்த்தல் என அனைத்து வேலைகளையும் முடித்து சுவறளவுள்ளதொரு கணிணித்திறையில் திரைப்பட நுழைவுச்சீட்டை முன்பதிவு செய்வது போல் விடுதியில் தனக்கு விருப்பமான அறையை நிலன் தேர்வு செய்து அதன் சாவியை வாங்கித் தன் பொருட்களுடன் தற்போது அங்கே செல்லும் வழியில் தான் இந்த காபியின் மணம் அவர்களது பயண வேகத்தைக்குறத்தது. இருவரும் ஒரே நேரம் இத்தனை நாட்கள் ஓடியதை உண்ர்ந்தது போல் பெட்டி, பைகளைச் சுமந்துசெல்வதை நிறுத்தி “காபி” என்றனர்.
அங்கு நிறந்திருந்த காபியின் மணம் ஒருபுறம் களைப்பின் அளவை மதிப்பிட்டுக்காட்டியும் அதே நேரம் இத்தனை நேரம் உணராப் பசித்தலைவலிக்கு மருந்தாகவும் இருவேறு பரிணாமங்களில் அவர்கள் முன் வந்து நின்றது.
இடப்பக்கம் பார்வையைச் செலுத்தியதில் அனைத்து வ
கையான உணவுப்பண்டங்களும் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்படது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. “ உனக்கு ஒரு பர்கரும் காபியும் வாங்கட்டுமா” என்றபடியே மைதானத்தை ஒட்டிய ஓர் கல் இருக்கையில் தன் கைகலில் பற்றியிருந்த பைகளை வைத்துவிட்டு
உணவகத்திற்குள் சென்றார்.
இருக்கையில் அமர்ந்த நிலன் தன் பைகளை கழற்றி வைப்பதற்குள் எங்கிருந்தோ வந்த மூவர் அவனை சுற்றினின்றுகொண்டிருந்தனர்.
வினித் : “ஹேய், ஹவ் ஆர் யூ? ஐ ஆம் வினித்..திஸ் இஸ் வருண் அண்டு கரண்.ஆர் யூ அ நியூ ஸ்டூடெண்ட?
நிலன் : ஹாயி.. சோ நைஸ் டு மீட் யூ ஆல்.. ஐ அம் நிலன்.. ஐ அம் ப்ரம் கனடா..
வருண் : டேய் நிறுத்த சொல்லுங்கடா ஒன்னுமே புரியல…
வினித் : சிரித்துக்கொண்டே “தமிழா பேரு?”
கரண் : ஓ அதான் எனக்கு புரியலயா…
வருண் : டேய் உனக்கு பேர் மட்டும் தாண்டா புரியல எனக்கு அவன் பேசுனது பூராவே சப்டைட்டில் இல்லாம புரியல டா..
வினித் : நாங்களும் நியூ தான் ப்ரோ..பரீன் இங்கிலிஸ் எல்லாம் வேணாம் ப்ரோ.. தமிழ்லயே பேசலாமே
நிலன் : ஸுயர்..நீங்க எந்த ஸ்டிரீம்?
வருண் : “புட்வேர் டிசைனிங்” ப்ரோ
நிலன் : வாவ்.. நானும்..
வினித் : கிரேட் எந்த ரூம்? இவ்ளோ தான் உன் லக்கேஜா?
நிலன் : 1003 டாப் ப்ளோர்.. கொஞ்சம் சாப்பிங் இன்னும் பண்ணனும்..
கரண் : 1003 ஆ?
நிலன் : ஆமா, அது ஒன்னு தான் டபுள் சைஸ்ல சிங்கில் ஆக்குபண்ட்டா இருந்தது..
வருண் : ப்ரோ வெணாம் ப்ரோ.. உனக்கு இருக்குற லக்கேஜுக்கு நீ படிக்கட்டுக்கு அடியில மோட்டார் ரூமுல கூட இரு ப்ரோ அந்த ப்லோர் வேணாம்.
நிலன் : ஏன் ப்ரோ என்ன அச்சு?!
வினித் : இப்போவே போனா வேற ரூம் மாத்த வாய்ப்பிருக்கு.. நேரா போய் மாத்திட்டு வாங்க ப்ரோ.. அவனுங்க ஆபிஸ்ல இந்த வாரம் அட்மிசன் ஆன எல்லாருக்கும் அந்த ரூமைத்தான் அலாட் பண்ணிருக்காங்க..
கையில் சப்பாட்டுப் பண்டங்களையும், காபிக்களையும் வைத்த தட்டை எடுத்துக்கொண்டு நிலனின் தந்தை வருவதைக்கண்ட அவர்கள் மெல்ல புன்னகைத்துக்கொண்டு மைதானத்திற்குள் சென்றனர்.
பிரபாகரன் : யாருப்பா அவங்க? ஏதும் பிரச்சனையா?
நிலன் : இல்லை டாடி, நோ இச்சூஸ் ..எனிஹொவ் வேற ரூம் சேஞ்ச் பண்ண சொன்னாங்க.. அவங்களும் என் க்ளாஸ் தான்..
பிரபாகரன் : ஏன் என்ன காரணம்?
நிலன் : என்னன்னு தெளிவா சொல்லல.. அந்த ப்ளோர் ரூமே வேண்டாம்னு சொன்னாங்க
பிரபாகரன் : சும்மா இவங்க உன்னை வேற ரூமுக்கு மாத்திட்டா தாங்க தங்கிக்க பெரிய ரூம் நல்லா இருக்கும்னு ஏதும் சொல்லியிருப்பாங்க.. நம்ம போய் பார்ப்போம் உனக்குப் பிடிக்கலைன்னா பிறகு பாத்துக்கலாம்.
நிலன் : இல்லை டாடி நான் ஓன்லைன்ல விர்ட்டுஅல் டூர்ல பார்த்து செலெக்ட் பண்ணின ரூம் தான் அது. எனக்கு பிடிச்சு தான் எடுத்தேன்.
பிரபாகரன் : ஓகே
இருவரும் வாங்கிய பண்டங்களை மொக்கிக்கொண்டே அங்கு கண்ணில் பட்டவை அனைத்தயும், அனைவரையும் பற்றி பேசிக்கொண்டே விடுதி கட்டிடத்திற்கு வந்து சேர்ந்தனர். பணியாள் உதவியுடன் அறை எண் 1003 வரை பொதிகளைக் கொண்டு வந்து அறைக்கதவை திறந்தவனுக்கு பேச்சே வரவில்லை. ஒரு கணம் என்ன என யோசித்துக்கொண்டே எட்டிப்பார்த்த பிரபாகரன் அதே நிலைக்கு சென்று விட்டார். விசாலமான அறை, மூன்று புறங்களும் வெள்ளை நிறச்சுவர் கதவுற்கு நேரே தெரிந்த சுவர்ப்பகுதி முழுவதும் கண்ணாடியால் ஆனது. அலங்காரமாய் வடுவமைக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு புற முடிவு இவனது அறை ஆதலால் அக்கண்ணாடிச்சுவர் அறுங்கோன வடிவு கொண்டிருந்தது அதில் அமர்ந்து பேசி அல்லது படுத்துறங்கும் படி சிறு உயரத்திற்கு தரை உயர்த்தப்பட்டு அதில் கச்சிதமாய் வடிவு செய்யப்பட்ட மெத்தை போடப்பட்டிருந்தது. அக்கண்ணாடி வழியே வெளியில் தெரிந்த தாமரை, அல்லிகள் நிறை தடாகமும் நெடுந்துயர்ந்த மரங்களும் அவர்களை ஏழு நட்சத்திர விடுதியில் இருப்பது போன்ற நிலைக்குத் தள்ளியதே பேச்சற்று இருவரும் நின்றமைக்கான காரணம்.
தொடரும்…………………………..
- மா. தேனருவி


Comments
Post a Comment