சுந்தரி தூத்துக்குடி கிறிஸ்தவப் பாதிரிமார்களின் கல்விக்கூடங்களில் கல்வி கற்றவள். மழலைக்கல்வி முதல் கல்லூரிப் பட்டப்படிப்பு வரை தவறாமல் முதல் மதிப்பெண் பெற்றவள். ஆசிரியர்கள் மீது அதீத அன்பு கொண்டதாலும், அக்கால ஆங்கில இலக்கியங்களில் அதிக நாட்டம் கொண்டு படித்ததாலும் தன் வகுப்பு மாணவர்களைப் போலல்லாமல் ஆசிரியரைப்போன்ற குணங்களுடன் சிறந்து திகழ்ந்தாள். இயல்பிலேயே தொலைக்காட்சித் தொடர்களில் நாட்டமில்லாமலிருந்ததாலும், புத்தகம் படிப்பதையே பொழுதுபோக்காகவும் கொண்டதாலும் தான் பெற்ற பிள்ளையையும் அவ்வாறே வளர்த்தாள். பெரும்பாலும் வீட்டில் இருக்க வாய்ப்பில்லாமல் அலையும் கணவனும் வீட்டில் தங்கும் பொழுதுகளில் மனைவியும் குழந்தையும் இயல்பாகக் கொடுக்கும் அமைதியான சூழலைப் பெரிதும் விரும்பினான். அந்தப் பொழுதுகளைத் தான் சுற்றும் ஊர்களின், தன் வேலையின் கதைகளைப் பாரிக்கு கூற பெரிதும் பயன்படுத்தினான்.
தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் கடல் வழியே ஓர் சிற்றூரில் பாரியின் வீடு அமைந்திருந்தது.அவனது தந்தை வழித் தாத்தாவின் பூர்வீக சொத்து.மேலும் அது அவனது அப்பா வேலை பார்த்த அனைத்து பிரதேசங்களுக்கும் குறுகிய தொலைவில் அமைந்திருந்ததால் அங்கேயே பாரியுடன் வசித்து வந்தனர். சுற்றிய அனைத்து வீட்டாரும் சுற்றத்தார் எனினும் அவர்களது வீட்டில் இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். வீட்டில் சுந்தரி வைத்ததே சட்டமாதலாலும் அவளது பண்புகளுக்காகவே அவளை வேண்டிக்கேட்டு மணமுடித்தவர்களாகையால் அவர்களது வீடு தொண்ணூறு சதவிகிதம் புத்தகங்களாலும் பத்து சதவிகிதம் கீரை,காய்கறிச் செடிகளாலும் நிறைந்திருந்தது.
சுந்தரியும் அவள் கணவனும் அக்கிராமத்திலேயே அதிகம் படித்தவர்கள். யாருக்கு எந்த உதவி, சந்தேகம் எனினும் இவைகளிடம் தான் வந்து கேட்பார்கள். பாரி பிறந்தது முதலே ஓர் இளவரசன் போல் பாவிக்கப்பட்டான். அனைவரும் அவனைப் போற்றி, புகழ்ந்து வந்தனர். பாரி பள்ளி செல்லும் காலம் வரை சுந்தரிக்கு வாழ்க்கை வசந்தகாலமாகவே இருந்தது. எந்தப்பள்ளியில் சேர்க்கலாம் என்றால் அங்கு ஒரே ஒரு பள்ளி தான்.
பக்கத்து ஊர்களிலிருந்து என்றைக்கு ஆசிரியர்கள் வருகிறார்களோ அன்றைக்கெல்லாம் வகுப்பு எடுக்கப்படும். மீதி நாட்கள் விடுமுறை தான்.
பாரி ஓர் அறிவார்ந்த பிள்ளை. சுட்டித்தனமும் சுறுசுறுப்புமிக்க குட்டிக்குழந்தை. அம்மா, அப்பா, ஸ்கூல் மிஸ், பத்து தெரு தாண்டினால் பக்கத்து ஊர், அதில் இருக்கும் டியூசன் மிஸ் என அனைவர் கூறுவதையும் கேட்டு நன்கு படிப்பவன் ஆதலால் அனைவருக்கும் மிக செல்லம்.
அவன் அனைத்திலும் சிறந்து விளங்குவது சுந்தரிக்கும், ஆதவனுக்கும் மிகப்பெருமை. திடீரென ஒரு நாள் ஆதவன் சொன்னான்..” உன்னை கல்யாணம் கட்டுணதோட நாமளும் மதுரைலயாவது போய் ஸெட்டில் ஆகியிருக்கனும்.இங்க இதுக்கு மேல நமக்கு வளர்ச்சி இல்ல..”
சுந்தரியோ எதிலும் தானே முதல் வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாதலால்..சற்று யோசித்தவாறே சொன்னாள் ..” இங்க நாம தான டாப்புல இருக்கோம்..இங்க என்ன குறை..இருக்குறதுல பெரிய வீடு, தோட்டம், ரெண்டு பார்ட்டுனர் காரு, வேண்டிய எல்லா வசதியும் வீட்டுலயே கிடைக்கிது, ஏதும் வாங்கனும்னாக்கூட ஆன்லைன்லயே வாங்கிக்கிடலாம்.. பாரியும் ஸ்கூல் பர்ஸ்டா வாரான்..”
நடுவில் திடீரென சிரித்த ஆதவன் “ அதுதான் எனக்கு கவலை, போட்டிக்கு ஆளே இல்லைனா எப்படி முன்னேறுவான்..இந்த ஸ்கூலையாச்சும் அடுத்தவருசம் மாத்தனும்..”
சுந்தரியும் பக்கத்து ஊரில் உள்ள பன்னாட்டுப் பள்ளி எனில் தானும் கூட சென்று வரலாம்..மற்ற பிள்ளைகளின் தாய்மார்களைப் பார்க்கலாம்..தான் பள்ளி கற்ற காலத்தை நினைத்துப்பார்த்து அது நல்ல முடிவு தான் என அவளும் ஆவலுடன் பாரிக்கு புது சட்டை எல்லாம் போட்டு…நாள் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பாரியிடம் பேசி, அவனை நாளுக்கு நாலு முறை குளிப்பாட்டி, நகம் வெட்டி, முடி வெட்டி, புது காலுரையும் காலணியும் போட்டுக் கிளப்பிவிட்டாள். பள்ளிக்கு சென்று மிகிழுந்திலிருந்து அவனை இறக்கி விடும் முன் தன் பட்டுச்சேலை முந்தாணையால் புது கருப்பு காலணிமீது தாமரை இலை நீர் போல படர்ந்திருந்த கடற்மண் துகள்களை துடைத்துவிட்டாள். பாரி நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என எல்லாவற்றிலும் முதல் மாணவனாய் வந்து அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்ததை அவனது ஊரே கொண்டாடியது என்றே சொல்லலாம்.
இவ்வாறு சேர்ந்த பள்ளிக்குச் செல்லவே இன்று காலை எழுப்பிக்கொண்டிருந்தாள் சுந்தரி.கடந்த மூன்றாண்டுகளில் பள்ளியிலேயே முதல் மாணவனாகச் சிறந்து விளங்கிவந்தான் பாரி.
மூன்றாமாண்டு தேர்வு முடிவுகளை உற்று பார்த்துக்கோண்டிருந்த ஆதவன் தலையை அலைபேசி திரையிலிருந்து உயர்த்திப் பாரியை பார்த்தான்.
பாரியும், பக்கத்து வீட்டு முத்துவும் விளையாடிக்கொண்டிருந்தனர். முத்து தான் இந்த ஊரில் சிறந்த மாணவனாக தற்போது படித்து வந்தான். பாரி ஆங்கிலத்திலேயே பேசிப் பழகியவனாதலால் தமிழில் முத்துவுடன் பேச சற்று சிரமப்படுக்கொண்டு ஆனால் அதை இருவரும் சிரித்து ஓர் விளையாட்டாக எடுத்துக்கொண்டு மகிழ்ந்திருந்தனர்.
ஆதவன் : சுந்தரீ… ஏய் என்னா பண்ணுற கூப்புடுறேன்ல..
சுந்தரி : என்ன ஆச்சு..மூணாவது மாடிக்கு ஏறி வரணும்ல…
ஆதவன் : அடுத்த வாரம் லிப்ட்ட வச்சுரலாம்..ஆர்டரெல்லாம் போட்டுட்டேன்..சீக்கிரமே பேக் பண்ணு.
சுந்தரி : எதை?
ஆதவன் : அங்க பாரேன்…பாரி மண்ணுல உக்காந்து முத்துவோட விளையாடுறான்..
சுந்தரி : ஆமா .. நான் தான் வெய்யில் நேரம் கடலுக்கு போவாதீங்கன்னு மரத்தடியில விளையாட சொன்னேன்..
ஆதவன் : இல்லடி..பாரிக்கு இதெல்லாம் பத்தாது..அந்த ஓட்டல் ஓனர் ஒய்ப் சொன்னாங்கன்னு சொன்னியே ஒரு கான்வெண்ட் அடுத்த வருசத்துக்கு அங்க சேத்துருவோமா?
சுந்தரி : அதுவா? அது எங்கயோ ஊட்டியில இல்ல இருக்காம். இப்ப தான பொர்த்து போறான்…ரெண்டு வருசம் போட்டுமே..
ஆதவன் : இல்லடி வருசம் கூட கூட அட்மிசன் போடுறது கஸ்டமாயிரும்.. அதோட இந்த ஊர்ப் பசங்களோட எல்லாம் பழகி என்னத்தடி கத்துக்கப்போறான்.. அங்க எல்லாம் பெரிய பெரிய வீட்டு பசங்களோட பழகுவான்..அதாண்டி நமக்கு இந்த ஊர்க்காதவங்க முன்னாடியெல்லாம் பெருமை..
அன்றிரவு பாரியைக்கூட்டிச்சென்று ஊட்டியில் சேர்த்தது தான்.. அதன் பின் பாரியைப் பொங்கல் திருவிழாவில் மட்டும் ஊரார் பார்த்தனர்.. எப்போதும் அலைபேசி, கணிணி என யாரிடமும் பெரிதாய் அவன் பேசிக்கொள்ளவில்லை..முத்து பக்கத்து வீட்டுக்காரன் என்பதால் அவனுடன் மட்டும் கொஞ்சம் சேர்ந்து படம் பார்ப்பது, சைக்கிள் ஓட்டுவது, தனக்கு ஏதும் கடைக்கு செல்ல வேண்டுமானால் அவனது துணையுடன் போவது என்ற அளவில் தொடர்புவைத்துக்கொண்டான் பாரி.
வருடங்கள் ஓடின.
சுந்தரி மொட்டை மாடியில் நின்று ஆதவனிடம் கேட்டாள் : “இன்னுமா சிக்னல் கிடைக்கல?அங்க பாருங்க எல்லாரு வீட்டுலயும் கோலமெல்லாம் போட்டுட்டாங்க. நானும் போய் போடணும். விடிஞ்சா பொங்க வைக்க தான் நேரம் சரியா இருக்கும்.”பதிலுக்கு நிக்காமலேயே திரும்பி நடந்தவளுடன் சேர்ந்து தானும் லிப்ட்டில் இறங்கினான் ஆதவன்.
“அடுத்த பொங்கலுக்காவது ஊருக்கு வாயேன். எங்களை எல்லாம் பாத்தே மூணு வருசம் ஆகுது..இரெண்டாம் பிள்ளைய நான் கையில வாங்கிக்கூட இன்னும் பாக்கல” என்று பாரியிடம் புலம்பியதற்கு “அப்பா, சும்மா கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க ஏதாவது முக்கிய காரியம்னா மட்டும் சொல்லுங்க. நான் இந்தியா வர்ரேன்..என் ஒய்ப் பசங்களுக்கு எல்லாம் அந்தக் கடல் அழுக்கெல்லாம் ஒத்துக்காது” என்று அவன் கடிந்து கூறி இணைப்பைத் துண்டித்து இன்றோடு ஒரு வருடமாகிறது.
இன்ஸ்டாகிராமில் பாரியின் கணக்கைப் பின்தொடர்ந்து அவன் போடும் படங்களில் அவனைப்பார்ப்பதே இப்ப்போது இருவருக்கும் மனமகிழ்வு. நேற்றைய அவனது படப்பதிவைப் பார்க்க ஆதவனும், சுந்தரியும் முயன்று இதுவரை முடியாமல் தான் கீழே வந்துகொண்டிருந்தனர்.
கதவைத்திறந்து வாசலைத்தெளிக்க சுந்தரி போனபோது வாசலில் விளையாடிய இரு குழந்தைகளைக் கண்டாள்.
பக்கத்தில் நின்றிருந்த முத்து பேசலானான்,” என்ன அத்தை எப்படி இருக்கீங்க…எம்புள்ளைங்க தான்..பொங்கலுக்கு அப்பா அம்மாவை பார்க்க வந்தோம்..இங்க நானும் பாரியும் வெளையாடுனதெல்லாம் அப்படியே நினைவிருக்கு..அப்பா அடிக்கடி போன் போடுறாங்க..சரி நம்மள தேடுறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன்..பொண்டாட்டி பசங்கள இங்கயே உட்டுட்டு போய் நானும் வீட்டை எல்லம் வித்துட்டு ஊரோட வந்துறப்போறேன்…இது தான் பசங்களுக்கும் நல்லது எங்க அப்பாவுக்கும் நல்லது..பிள்ளைகளுக்கு பொங்கல்னா என்னான்னே சொல்லாம நியூ இயர் செலெப்ரேசன் மட்டும்தான் பண்றாங்க அந்த ஊர் ஸ்கூல்ல லாம் ..நம்ம பழக்கவழக்கம் தெரியாம வளத்து என்ன செய்ய என்ன சொல்றீங்க அத்தை.. அவளுக்கு ஒர்க் ப்ரம் கோம் தான் சோ பிராப்லம் இல்ல..நானும் டிரான்ஸ்பர் ரிக்வெஸ்ட் குடுத்துட்டேன்..இங்க ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாமான்னும் யோசிக்கிறேன்.. பாரி எப்ப வர்றான்.. அவனை பாத்தே ரொம்ப நாளாச்சி..அவன் பசங்களும் என் பசங்க்ளும் இந்த மரத்தடியில விளையாண்டா ....” முத்து பேசிக்கொண்டே போனான்..
ஆதவனின் கைபேசியில் புது அறிவிப்பு வந்தது..”பாரி அப்லோடட் அ ந்யூ போஸ்ட்”.. இரு குழந்தைகளின் பாதங்கள் கடற்கரையில் பாதி அலையில் நனைந்த படத்தைப் பகிர்ந்து பாரி எழுதியிருந்தான் “கடற்கரை, கடல் மணல்,கடற்காற்று, வீடு போன்றதொரு உணர்வு.”

Comments
Post a Comment