நான் பள்ளியிற் பயின்ற காலத்தில் வசித்த ஊரின் பெயர் மயிலாடுதுரை. வீட்டருகே இருந்த தையல், தட்டச்சுப் பள்ளியில் இந்தியும் பயிற்றுவிக்கப்பட்டது. அந்த ஊரிலேயே அது தான் பெரிய தையல் பள்ளி. இந்தி பயிற்றுவிக்கவும் அதுவே பெரிய பள்ளியாக இருந்திருக்க வேண்டும்.ஏனைய இந்தி வகுப்புகள் சிறு வீட்டுத் திண்ணைகளில் இருந்த காலத்தில் இது ஏழு அடுக்கு வீட்டின் ஏழு அறைகளிலும் வெவ்வேறு பாடங்கள் என அதிகாலை முதல் பள்ளிக்கு பிள்ளைகள் கிளம்ப எத்தனை மணித்துளிகள் அவசியம் வேண்டுமோ அத்தனை மட்டும் விட்டு எட்டேகால் மணி வரை நிகழும். அப்போதே தையல் வகுப்பு மாணவிகளும் தட்டச்சு பயில்வோரும் வந்துவிடுவர். அவர்களது வகுப்புகள் மதியம் வரை நிகழும். மீண்டும் மாலை பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு இந்தி வகுப்புகள் இரவு வரை நிகழும். மூன்று ஆசிரியர்கள் இவை அனைத்தையும் பயிற்றுவித்து சமையல், வீட்டு வேலைகள் மற்றும் வெளிவேலைகளையும் கவனித்துக்கொள்வர். இப்போது எண்ணிப்பார்க்கிறேன் மூவரில் யாரேனும் ஒருவர் அனைவரும் வந்து விட்டீர்களா என்று சரியாக வகுப்பு துவங்கும் நேரத்தில் கேட்டு யாரும் இல்லை என்று தாமதம் செய்யாமல் என்ன பாடம் என கேட்டவுடன் ம்ம்ம்.. எடுங்கள் பக்கம் எண் என்று பக்க எண்ணைச் சரியாகச் சொல்வதுடன் நிற்காமல் தொடர்ந்து பாடத்தையும் புத்தகம் இல்லாமலேயே மனப்பாடமாகக் கூறிப் பயிற்றுவிப்பார்கள். இன்று எண்ணிப்பார்க்கிறேன் எவ்வளவு மனப்பாடமாக அத்தனை புத்தகங்களும் இருந்திருந்தால் அவர்களால் அவ்வாறு பயிற்றுவித்திருக்க இயலும்.எவ்வளவு தொழில் நாட்டம் இருந்திருந்தால் ஒரு வகுப்பு கூட குறைபடாமல், தாமதிக்காமல், விடுமுறை கூட இல்லாமல் [ஞாயிறு, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள், தாமதமாக சேர்ந்தவருக்கு மற்றும் விடுமுறை எடுத்த மாணவருக்கு வகுப்புகள் என அன்றும் முழு வேலை நாளாகவே இருக்கும்] அவர்கள் அதைச் செய்திருப்பார்கள்.
அதில் மூத்த ஆசிரியர் பஞ்சாபைச் சேர்ந்த முதிர்ந்த பெண்மணி. சாந்தா டீச்சர். மிக நேர்த்தியான ஆசிரியைக்கான உடை, உருவம், சிகை அலங்காரம் என எப்போதும் அன்புடனே எங்களிடம் பேசுவார். அவரது தம்பி மற்றொரு மூத்த ஆசிரியர் தான் மாணவர் விடுப்பு, கட்டணம், பரீட்சைக்கு விண்ணப்பித்து அனுப்புதல் என அனைத்தையும் கவனித்து பிள்ளைகளை கடிந்துகொள்வதையும் செய்வார். ஓர் இளம் வயதுப் பெண் ஆசிரியர் இவர்களது தம்பியின் மனைவி சிறு வகுப்புகளையும், வீட்டு வேலைகளையும் பார்த்துகொள்வார். வகுப்புகள் கூடக்கூட சாந்தா டீச்சரே தான் பயிற்றுவிப்பார். உச்சரிப்போ, பாடமோ யாரேனும் ஒருவருக்கு புரியவில்லை எனினும் அவருக்கு விளக்கிய பின்னரே வகுப்பை எடுத்து முடிப்பார்.
மிகச்சிறிய வயதில் நான் இந்தி வகுப்புகளுக்குச் சென்றுவிட்டேன்.ஆக உயர் நிலை - 5,6,7,8 ஆம் நிலை பரீட்சைக்கான இந்தி வகுப்புகளை நான் கற்றபோதும் எனக்கு பள்ளிகளில் பயிலும் வகுப்பு நிலைப்படி இடைனிலை கல்வி வயதே ஆனது.
இந்தி பாடப்புத்தகங்களில் மூன்றாம் பரீட்சைக்கு மேலுள்ள வகுப்புகளுக்கான பாடங்கள் சற்றே கடுனமானவை. மொழியிலும், கருத்திலும் கடினமானவை. அவற்றில் பல காந்தியின் வாழ்க்கைக்குறிப்புகள், துளசி இராமாயணக் கவிதைகள் மற்றும் அவற்றின் துணைக்கதைகள், கவிதைகள் போன்றன.
இவற்றைப் புரிந்து கொள்ள எனக்கு முன்கதை, பின் கதைச் சுருக்கங்கள் பல தேவைப்பட்டன. அதற்காகவே காந்தியின் சுய சரிதையையும் இராமாயணக் கதைகளையும் நான் படித்ததுண்டு. அவ்வாறு படித்துமே இராமாயணக் கதையின் கிளைக்கதைகளினை ஒட்டி எழுதப்பட்ட கவிதைகள், கதைகள் புரியாமல் நான் இருக்கும் பொழுதுகளில் சாந்தா டீச்சர் எனை அழைத்து அவரது அருகில் அமர வைத்துக்கொண்டு அதன் கதாப்பாத்திரங்களை மற்றும் கதை நிலையினை விளக்கிச் சொல்வார். பல நாட்கள், அவரது வீட்டிற்கு அடுத்த வீடு எனது என்பதாலும், விடுமுறை நாட்களில் அவரிடமே நான் கை எம்பிரய்டெரி எல்லாம் கற்றுக்கொண்டேன் என்பதாலும் அதற்கு நான் மட்டுமே சில சமயங்களில் தனி மாணவியாக இருப்பதால் பிற தையல் வகுப்புகளினூடே எனைப் பல மணி நேரங்கள் இருக்கச்செய்து என் வகுப்புகளை எனக்கு எடுத்துக்கொண்டிருப்பார். அவ்வாறான சமயங்களில் சில பண்டிகை நாட்கள் வரும், பல பக்தி நூல்கள் பத்திரிக்கையுடன் வரும். அவர்கள் அனைத்து பூசைகளையும் புரியும் வட இந்திய பார்ப்பனர்கள். மேலும் அந்த ஊரிலும் பல நாட்கள் கோவில் விழாக்கள் பல நிகழும். அதை அனைத்துத் தரப்பட்ட மக்களும் கொண்டாடுவர் ஆகவே எனக்கு நிறைய விடுப்புகளும் அந்த நாட்களில் நீண்ட இந்தி வகுப்புகளும் வழக்கமான ஒன்று.
இவ்வாறு அவர் எனக்கு கூறிய பல கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று எப்படி சீதையுடன் இராமன் இந்தப் பாதைகளில் நடந்து சென்றான் என்பது. கைகளில் வண்ண நூல்களையோ ஓர் வெட்டப்பட்ட ஆடையையோ வைத்துக்கொண்டு அவர் எனக்கு அக்கதைகளை அவ்வளவு குதூகலத்துடன் சொல்லிக்கொண்டிருப்பார். இடையிடையே அந்த பாடத்தில் இந்த கவிதையின் நிகழ்விடமது, இந்த பத்திரிக்கைச் செய்தி வந்த இடம் இது என்று பல கதைகளைக் கூறுவார்.
இன்றும் என் நினைவில் நிற்கிறது எப்படி என் பள்ளி இருந்த இடத்தின் அருகில் அந்தக் காலத்தில் ஓர் அகண்ட காடு இருந்தது, அதன் வழியே சென்ற சீதைக்கு பாறைகளின் மேல் நடனமாடிய மயில்களை இராமன் காட்டிக்கிண்டே சென்றான் என அவர்கள் கூறிய கதையைக்கேட்டு என் பள்ளியின் சாளரம் வழியே எத்தனை தொலைவு பார்க்க முடியுமோ அத்தனை தூரம் வரை மயில் தெரிகிறதா என்று நான் கால் வலிக்க நின்றதுண்டு.உயர்கல்வி பயில அந்த ஊரைவிட்டு கிளம்ப வேண்டிய நாளில் நான் அழுதுகொண்டே அடம் பிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம் நான் அந்த மயில்களை இன்னும் காணவில்லை என்பது.
பற்பல ஆண்டுகளுக்குப் பின் நான் மயில்களைக் கண்டது என் ஆச்சிம்மாவின் வீட்டிற்கு வந்து அவரது உறவினர்களைக் காணச்சென்ற போது. இன்று வரை மயிலாடுதுறையில் நான் மயில்களையும் காணவில்லை, பாறைகளையும், கானகங்களையும் கண்டதில்லை. மாறாக எந்த ஊர்களுக்கு செல்ல விரும்பாமல் அழுது நின்றேனோ அங்கெல்லாம் எனக்கு மயில்கள் காணக்கிடக்கின்றன.
இன்றெண்ணிப் பார்க்கிறேன், அந்த சிறிய வீட்டில் இருந்து அத்தனை கலைகளை அத்தனை மகிழ்வுடன் இரசித்துப் பயிற்றுவித்த அவர்கள் மூவரைப்போல் ஆசிரியர்கள் வெகு சிலரையே நான் இன்றுவரை கண்டு, கொண்டிருக்கிறேன்.
புத்தகங்களையும் அவற்றின் வார்த்தைகளையும் கற்பது பெரிதல்ல. அதை யாரிடம் எப்படி கற்கின்றோம் என்பதும், அதன் முன்கதை, பின்கதை, கிளைக்கதைகளைப்பற்றி என்ன அறிந்து கொள்கிறோம் என்பதும் மிக அவசியமானது. இல்லாவிடின் கற்பனைக் கதைகளினை நம்பிக் கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்படப் பல வாய்ப்புகள் உள்ளன.
ஆசிரியர் தினம், காந்தி பிறந்த நாள், சில நாட்களாக எளிதில் காணக்கிடைக்கும் மயில்கள் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய சிலவற்றை அவை இல்லாத இடத்தில் கற்பனை இலக்கியங்களை நம்பித் தேடி கண்ணீர் விட்ட நாட்களின் நினைவாக இது இன்று எழுதப்பட்டது.
- தேனருவி மாரிமுத்து🦚🦚🦚
Comments
Post a Comment