பல காலமாகவே மனிதர்கள் எதைக்கண்டுபிடித்தாலும் அது இப்போதுதான் முதலில் கண்டு பிடிக்கப்படுகிறதா என்ற ஐயம் தோன்றாமலில்லை. இதற்குப் பாதி காரணமாக மக்களின் திருட்டுப் புத்தியினைச் சொன்னாலும் மீதி காரணமாக இருப்பது வரலாற்றின் நாம் அறியாப்பாகங்கள்.இன்றைய தேதியில் நிகழ்ந்த ஒன்றினைப் பற்றிய செய்தியினையே பலரும் திரித்துத் தன்னலமாக உண்மையினை மறைத்துப் பதிவிடுவதால் ஒரு செய்தித்தொலைக்காட்சியில் வரும் செய்தியின் உண்மைத்தன்மையையே பலமுறை சோதித்தறியவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவ்வாறல்லாமல் மற்றுமொரு முக்கிய காரணம், பல நூறாண்டுகளாக மறைக்கப்பட்டு, பலதரப்பட்ட காரணங்களால் அழிக்கப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் துணுக்குகள் தான் வரலாறெனும் புதிரின் துண்டுகளாக இருக்கின்றன. அவற்றின் மருவா மொழியினையோ, பயன்பாட்டினையோ, உண்மை உருவினையோ அறிய பலதரப்பட்ட மக்கள் பலரின் அறிவார்ந்த உள்ளீடு அவசியமாகின்றது. அது அவ்வாறு அறியப்படும்முன் பலவகை உள்ளீடுகளைக் கொண்டு உண்மை வரலாறு பலமுறை திரிந்துபோய்விடுகின்றது.
சில ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்திலுள்ள பொருட்கள், செயல்கள், பண்பாடு, மொழியினைக்கொண்டு பல மில்லியன் ஆண்டுகள் பழமையான வரலாற்றினை சிறு பகுதிகளினின்று முழுமைப்படுத்தி அறிந்துகொள்வதென்பது சற்று சிரமமான காரியம் தான். இதில் கற்பனை மிகு கவிகள் தம் கற்பனைத்திறனைவேறு இலக்கியங்களில் வடித்துவிட்டுச்சென்றுவிட்ட படியால், எது நிகழ்ந்தது, எது மிகைப்படுத்தப்பட்டது எது முழுதும் கற்பனையாலேயே உருப்பெற்றது என்பதனை அறிவது காலம் பல எடுக்கிறது.
நம்முடன் காலைக்கீழே வைத்தாலே தொடர்பிலுள்ள நிலத்தினைப்பற்றிய உண்மை வரலாற்றினை அறியவே இத்தனை சிரமங்களைக்கடக்க வேண்டிய நிலை உள்ளது இதில் நமக்குச் சற்று தொலைவில் நம் கை நீட்டித் தொடமுடியாத தொலைவிலுள்ள விண்வெளியினையும் அதன் வரலாற்றினையும் அறிய எத்தனை சிரமங்களைத்தாண்ட வேண்டியிருக்கும்?
ஈராயிரம் ஆண்டுகளாக ஆதி மனிதன் ஆதியில் குடியிருந்தது பாறை மறைவுகளிலும் குகைகளிலுமென்பது ஓரளவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு கருத்து. அதையொட்டி பழம் பாறை ஓவியங்கள் பழங்கால வரலாற்றை நிறுவும் வகையில் அமைந்துள்ளன என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறான ஓவியங்களே மிகப்பழமையான வரலாற்றுச் சான்றுகளாக அமைந்துள்ளன. அவற்றில் அமைந்துள்ள மிருகங்களின் ஓவியங்கள் அக்கால வேட்டை வாழ்வின் பரிமாணங்களைச்சுட்டுவதாக 2019 வரை கருதப்பட்டது. 2019இல் தான் அவ்வாறான மிருக உருவங்களில் சில வான்வெளியில் தோன்றும் நட்சத்திரக்குழுமங்களின் அமைப்புகளை நினைவாகக் குறித்து வைத்துக்கொள்ள எழுதப்பட்டவை எனச் சில ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்டது. அவ்வாறாகக் குறித்துவைக்கப்பட்ட காலங்கள் சில பெரும் நிகழ்வுகள் நிகழ்ந்த காலமாக அமைந்திருந்ததையும் அறிஞர் கண்டறிந்தனர். அவ்வாறான நிகழ்வுகள் வெரும்பாலும் விண்வெளியில் எரிகல் தோன்றிய காலமாகவோ அல்லது வால் நட்சத்திரம் தோன்றிய காலமாகவோ அமைந்துள்ளது. இயற்கையின் தயையினை முழுதும் நம்பி வாழ்ந்த கற்கால மனிதனுக்கு இயற்கையில் இப்பெரும் நிகழ்வுகள் நிகழ்வது அச்சத்தையோ அல்லது ஏதும் அறிவுறுத்தலையோ தந்திருக்கக்கூடிய காரணத்தால் தான் அது பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றினை ஆராய்ந்தால் இவ்வாறான நிகழ்வுகளுக்குப்பிறகு தான் உலகில் ஆகப்பெரும் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன என்பது தெளிவுறுகிறது. இந்த காரணத்திற்காகவே இவை கணக்கிற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இயற்கையினோடு ஒன்றிய வாழ்வினை நடத்தி வரும் எவருக்கும் அது வாழ்வியல் மாற்றம் அல்லது ஒரு நாகரிகத்தின் மறைவு என்ற அளவிலேயே அமைந்திருக்க வேண்டும்.
சில ஆண்டுகள் வரை தலையை உயர்த்தாமலேயே தொலைவில் வானமும் விண்வெளியும் பல சமயங்களில் நம்முன் தோன்றும். இன்று உயரப்பார்த்துகொண்டே சில காத தூரங்கள் நடந்தாலும் கட்டடங்களும் கரண்டு கம்பிகளுமே தோன்றுகின்றன. பல சமயங்களில் நான் நிலா என்றெண்ணி இமை மூடாமல் பார்த்துக்கொண்டே அருகில் திரும்பியதும் அது தெருவிளக்கோ அல்லது விளம்பரப்பலகையோ என்பது கண்டு ஏமாந்து போவதுண்டு.
இம்மாற்றம் வான வெளியினை நம்மிடமிருந்து மறைப்பது மட்டுமன்றி கண் காணா வண்ணம் தட்ப வெப்ப மாற்றங்களையும் நிகழ்த்துகிறது. இவ்வாண்டின் விண்வெளி வாரப் பேசுபொருளாகக்கொள்ளப்படும் “விண்வெளியும் கால நிலை மாற்றமும்” என்ற தலைப்பிற்கேற்ப நாம் கண்ட நாசாவின் பனி உருகி பச்சை பாசி பிடித்த கிரீன்லாண்டின் படத்தையும் நினைவிற்கொண்டு இனியேனும் வானத்தினைக் காணுமளவு ஓரிடத்தினை விட்டு விட்டு வீடு கட்டவும் ஒரு நாள் வான் சாகசத்திற்காக பல லிட்டர் எரிபொருட்களை நிறைத்த வானூர்திகளைப் பயன்படுத்துவதில் சிக்கனம் கொள்ளவும் முடிவுசெய்து இவ்விண்வெளி வாரத்தினைக் கொண்டாடி மகிழ்ந்திருப்போம்.
விண்வெளி வாரம் : 4-10 அக்டோபர்
- தேனருவி மாரிமுத்து💭💫
Comments
Post a Comment